சென்னை: பிகார் மாநில பாஜக தேர்தல் வாக்குறுதி குறித்து திமுக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன் நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.
அதில், “பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் பிகார் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஒரு தடுப்பூசி பலகட்ட சோதனைகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால் பாஜக இதுபோன்ற தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களை ஏமாற்றும் வேலையை செய்துவருகின்றது" என்றார்.
மேலும், மத்திய அரசு கொண்டுவரும் ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமே தவிர, அதை எவ்வாறு தேர்தல் வாக்குறுதியாகத் தர முடியும் எனக் கேள்வியெழுப்பிய அவர், இப்படிப்பட்ட தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றக்கூடியது; முட்டாள்தனமானது என விமர்சித்தார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28ஆம் தேதிமுதல் நவம்பர் 7ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கரோனா நோய்க்கிருமியின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், ஒரு மாநிலத்தில் மட்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இச்சூழலில், இன்று மத்திய பாஜக அரசின் சார்பாக பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் பிகார் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், பிகார் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.