சென்னை: 2020ஆம் ஆண்டு திமுகவின் செயல்பாடுகள், சரிவுகள், ஏற்றங்கள் என அனைத்தையும் இங்கு காணலாம்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியுடன் தொடங்கிய திமுக, 2020-இல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி முகத்துடன் வருடத்தை தொடங்கியது. ஆளும் அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இதற்கிடையில் திமுக, சட்டப்பேரவை தேர்தல் 2021ஐ தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உடன் இணைந்து பயணிக்கும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திமுக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. கொள்கையால் அமைப்பு ரீதியாக வலுவான கட்சிக்கு, எதற்கு வெளி ஆட்கள் என்று கட்சியில் பலர் மறைமுகமாக கேள்விகள் எழுப்பினர்.
பின்னர் மார்ச் மாதம் 7ஆம் தேதி திமுக மூத்த தலைவரும் பொதுச்செயலாளராக பதிவு வகித்து வந்த பேராசிரியர் க. அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். திராவிட கொள்கையில் தனது இறுதி மூச்சு வரை பிடிப்புடன் இருந்த க.அன்பழகன் மறைவு திமுக தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று வீரியம் தொடங்கிய நிலையில் ஊரடங்கு காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தொண்டர்கள் உதவிக் கரம் நீட்டினர். திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கரோனா தாக்கம் குறைய சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக முழு வீச்சில் தொடங்கியது. நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு மாவட்டங்கள் இரண்டு முதல் நான்காக பிரிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
திமுக-விற்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி மற்றும் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வத்தை பாஜக தனது வசம் இழுத்தது. இருவருக்கும் தனி வாக்கு வாங்கி இல்லையென்றபோதும் திமுக-வின் முக்கியமான பொறுப்பிலிருந்து ஒருவரும், எம்.எல்.ஏ ஒருவரும் பாஜக-விற்கு சென்றது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டத்தை செப்டம்பர் 9ஆம் தேதி கூட்டி திமுக-வின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வுசெய்யப்ட்டனர். திமுக தலைவருக்கு பிறகு மிகவும் முக்கியான பொறுப்புகளுக்கு புதிய நபர்கள் நியமிக்கப்பட்ட நிகழ்வு இந்த வருடத்தில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகின்றது.
திமுக-விற்கு 2021 வருடம் மிகவும் முக்கியமான வருடம். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலினின் 'மிஷன் 200' என்ற முழக்கத்துடன் திமுக செயல்பட தொடங்கியுள்ளது.