தமிழ்நாடு அரசியலின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் திமுகவின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார்.
பேராசிரியர் அன்பழகனின் மறைவையடுத்து திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரம் ரத்து செய்யப்படுவதாகவும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், 43 ஆண்டுகள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் - கழக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் சில நாள்கள் உடல் நலிவுற்றிருந்து, இன்று 07-03-2020 அதிகாலை 1:00 மணியளவில் மறைவெய்தியதையொட்டி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டு, கழகக் கொடிகளை ஏழு நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
![DMK leader Stalin on general secretary Anbazhagan death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6324243_dfs.jpg)
பேராசிரியர் அன்பழகனின் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு கீழ்ப்பாக்கம் வேலங்காடு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.