காவிரி மேலாண்மை ஆணையம் நீர் ஆற்றல் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதற்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக விளக்கம் அளித்து நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில்,
”காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டுவதற்கு பதில், தனது பதவியும், அரசும் நிலைத்தால் போதும் என்று, காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க முதலமைச்சர் மத்திய பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்.
காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது, ஒரு நிர்வாக நடைமுறை என்றும், விவசாயிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம் ஏற்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எழுப்பியுள்ள மிக முக்கியப் பிரச்னைக்கு, துறை அமைச்சரான முதலமைச்சர் பதில் சொல்லாமல், செயலரை விட்டு, அரைகுறையாக ஒரு அறிக்கைவிட வைத்திருப்பது, முதலமைச்சர் ’ரேபிட் டெஸ்ட் கிட்’ விவகாரத்தில் பதற்றத்துடன் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
எனவே, மத்திய அரசின் இந்த முடிவை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும். மேலும், அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை"- காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை விளக்கம்