தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சந்தையில் கிடைப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், சட்டப்பேரவைக்குள் அவற்றை திமுக உறுப்பினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டு சென்றனர். இதையடுத்து பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி அதனை ரத்து செய்ததோடு, தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸையும் எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் திமுக விலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்த நிலையில், அதனை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இடைக்காலத் தடையை எதிர்த்த வழக்கில் அரசு தரப்பில்ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு, உரிமைக்குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். சபாநாயகரிடம் முன் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட பொருட்களை பேரவைக்குள் கொண்டு வந்து பேரவை செயல்பட குந்தகம் ஏற்படுத்தியதால் உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் விளக்கினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்தெந்த பொருட்களை கொண்டு வர முன் அனுமதி பெற வேண்டும் என ஏதேனும் வழிமுறை உள்ளதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அரசு சார்பில், எது உரிமை, எது உரிமை மீறல் என்பதற்கு வரையறை செய்யப்படவில்லை எனவும், மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக்குழு அதன் முடிவை பேரவையில் தாக்கல் செய்யும் எனவும், பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு தொடரும் போது தான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், தற்போது இதில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லையெனவும் வாதிட்டார்.
தொடர்ந்து, திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் கு.க.செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர், உரிய காரணங்கள் ஏதுமின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிமைக்குழு இந்த விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தனர். உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டு அது உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி பெறாமல் கொண்டு வந்தனர் என பெயருக்கு திருத்தம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 4ம் தேதி வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, எந்த மாற்றமும் செய்யாமல் இரண்டாவது முறையாக வழங்கிய உரமைக்குழு நோட்டீஸையும் ரத்து செய்து ஆணையிட்டார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசை சாரும் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி