சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி திமுக நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில், 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரைக் கண்டிக்கும் வகையில், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட திமுகவினர் 3,500 பேர் கலந்து கொண்டனர். இச்சூழலில் அரசு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இவர்கள் அனைவரின் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாகக் கூட்டம் கூடுதல், நோய் தொற்று பரவுதல் கட்டுபாடுகளை மீறுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.