மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 புதிய இந்தியாவை உருவாக்க அடித்தளத்தை அமைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளும் கட்சி தொடங்கி, எதிர்க் கட்சிகள் வரை அனைவரும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, தொடக்கம் முதகே திமுக கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய நாட்டின் அரசியலமைப்பின்படி கல்வி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு கல்வியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
தொடக்கம் முதலே புதிய கல்வி கொள்கையை திமுக எதிர்த்து வருவதோடு அதில் என்ன மாற்றங்கள் தேவை என்பதையும் வலியுறுத்துவருகிறது. இதை எதையும் செய்யாமல் தற்போது மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது.
மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு சுமையாக இருக்கும். இது ஒருவகையான மொழி திணிப்பு. இதனால் பல மாநிலங்களின் அடையாளம் பாதிக்கப்படும். எனவே மும்மொழி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
அதேபோல் மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களிடைய அதிக சுமையை உருவாக்கும். அதேபோன்று கல்வியில் பெண்கள் பங்கு பற்றியும், இடஒதுக்கீடு முறை பற்றியும் புதிய கல்விக் கொள்கையில் எதுவும் இடம்பெறவில்லை. புதிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொழில் பயிற்சி என்பது குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இது சாதிய படிநிலைகளை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இதுபோன்ற பல குளறுபடிகள் உள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கொள்கை பற்றி விரிவாக விவாதிக்க அனைத்து மாநில பிரதிநிதிகளை நியமித்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்க வேண்டும்' - வைகோ