அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தேமுதிக. சரி... கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் யாருக்கு லாபம். அதற்கு முன்பாக தேமுதிக சந்தித்த தேர்தல்களையும், பெற்ற வாக்குகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
அசைக்க முடியாத அதிமுக-திமுக
தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிமுக, திமுக என்ற இரு பிரதான கட்சிகளைத் தாண்டி யார் புதிய கட்சி ஆரம்பித்தாலும் அவ்வளவு எளிதாகக் காலூன்ற முடியாது. இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். தேசிய அளவில் பெரிய கட்சியான பாஜக எவ்வளவோ முயன்றும் தமிழ்நாட்டில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
![ஸ்டாலினுடன் விஜயகாந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10949947_vijaykanth-stalin.jpg)
பொதுத்தேர்தல்களில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற முடியும். இதுதான் தமிழ்நாடு அரசியல் களத்தின் உண்மையான நிலை.
தேமுதிக முதல் தேர்தல்
2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜயகாந்த், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை களம் இறக்கினார். அதிமுக, திமுக என இரு பிரதான கட்சிகளை எதிர்த்துப் பரப்புரைசெய்த விஜயகாந்த், தெய்வத்துடனும் மக்களுடனும்தான் கூட்டணி எனக் கூறி தேர்தலைச் சந்தித்தார்.
![எடப்பாடி பழனிசாமியுடன் விஜயகாந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10949947_vijaykanth-cm.png)
எதிர்கட்சிகளைப் பாரபட்சமின்றி விமர்சித்த விஜயகாந்திற்கு பலத்த ரெஸ்பான்ஸ். விஜயகாந்தின் பரப்புரைக்கு கூட்டம் அதிக அளவில் கூடியது. ஆனால் நடிகரைப் பார்ப்பதற்கு கூட்டும் கூடுவது இயல்புதான் என்றும், கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறுமா என எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சிக்கப்பட்டது.
தேமுதிக நிலைத்து நிற்க காரணம்
ஆனால் அந்தத் தேர்தலில் சுமார் 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் விஜயகாந்த். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே கிராம அளவில் கிளை அமைப்புகளை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த். இதுவே இன்றளவும் தேமுதிக நிலைத்து நிற்பதற்கு காரணம்.
எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்
இதேபோல் 2009 மக்களவைத் தேர்தலிலும் தனியாகத் தேர்தலைச் சந்தித்த தேமுதிக, அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இரு தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய தேமுதிகவுக்கு 2011ஆம் ஆண்டு ஜாக்பாட் அடித்தது.
![கமலுடன் விஜயகாந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10949947_kamal-vijayakanth.jpg)
அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை வாரி வழங்கினார். இதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற்று எதிர்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.
மநகூ-வுடன் பயணம்
இதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் மோதல், விஜயகாந்தின் உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது தேமுதிக. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதிவரை கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. ஆனால் திமுகவுடனான கூட்டணி பேச்சு திடீரென அடைபட்டதால், வேறு வழியின்றி மக்கள் நலக்ககூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலின்போது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, 'பழம் (தேமுதிக) நழுவி பாலில் விழும்' என கூட்டணிக்காக விஜயகாந்துக்கு வலைவிரித்தார்.
தேமுதிக தோல்வி
தேமுதிக எடுத்த தவறான முடிவால் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி கிடைத்தது. வாக்கு விழுக்காடு மிகவும் குறைந்தது. அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் அந்தக் கட்சியின் வாக்கு விழுக்காடு கண்டிப்பாக அதிகரித்திருக்கும்.
![விஜயகாந்த் பிரேமலதா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10949947_1.jpg)
திமுக தோல்வி ஏன்?
ஆனால் அந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக. 1000, 2000 என மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. மக்கள் நலக்கூட்டணி அமையாமல் இருந்திருந்தால் அல்லது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருந்தால் ஒருவேளை திமுக ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.
சரி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நிலை என்ன? 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அதிமுக தேர்தலைச் சந்தித்தது. ஆனால் 38 தொகுதிகளில் தோல்வி அடைந்தது அதிமுக.
தற்போது தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில், தேர்தலைச் சந்திக்கப்போகிறது அதிமுக. திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கிறது திமுக. ஆனால் தமிழ்நாட்டு வாக்காளர்கள், மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முடிவும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேறு ஒரு தீர்ப்பும் வழங்கி வந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.
யாருடன் கூட்டணி?
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறிவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பார்ப்போம். திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. அண்மையில் திருமண விழா ஒன்றில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
![விஜயகாந்த் தினகரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10949947_vj_ttv.jpg)
அமமுகவுடன் கூட்டணி?
எனவே அமமுகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக, தேமுதிக பொதுச்செயலாளர் சுதிஷ், அமமுக நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சசிகலா சிறையில் இருந்து திரும்பியபோது, அவருக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குரல் கொடுத்ததையும் பார்க்க வேண்டும்.
எனவே தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்து தங்கள் அணியை திமுக பலப்படுத்திக்கொள்ளுமா அல்லது அமமுக அணிக்குச் செல்லுமா? இல்லை மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப்போல் புதிய மக்கள் நலக்கூட்டணியை உருவாக்குமா தேமுதிக? இதற்கான விடை அடுத்த சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாள்களில் தெரியவரும்.
அதுவரை விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை திரைப்படம்போல் நாமும் தேமுதிக நடவடிக்கைகளை புலன் விசாரணை செய்து உங்களுக்கு அளிக்கிறோம்.....