இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘‘நீட்’’ தேர்வின் முடிவுகள் வெளிவந்துவிட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய அளவில் 23ஆம் இடம்தான்; 2018 ஆம் ஆண்டில் 38.83 விழுக்காடு வெற்றி என்றால் இவ்வாண்டு 39.56 விழுக்காடுதான் - பெரிய அளவில் மாறுதல் ஒன்றும் இல்லை.
டாக்டர்களின் பிள்ளைகள் டாக்டர்கள்
இதில்கூட மதிப்பெண்கள் பெருமளவு பெற்றவர்களின் பெற்றோர்கள் டாக்டர்களாகவும், அதிக கல்வி கற்றவர்களாகவும்தான் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 31,239. ஆனால், இதில் தேர்ச்சி என்ன தெரியுமா? 2.06 விழுக்காடே! இப்பொழுது வெளிவந்திருக்கிற முடிவுகள்கூட தகுதிக்கான தேர்வே தவிர, மருத்துவக் கல்லூரிக்கு இடம் கிடைப்பதற்கான முடிவுகள் அல்ல.
‘நீட்’ மாணவிகளின் பலி பீடமா?
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நம்பிராஜ் மீன் வியாபாரி, அவரின் மகள் ‘‘வைஸ்யா’’ உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டு துடிதுடித்து மரணம் அடைந்திருக்கிறார்.
திருப்பூர் பின்னலாடையில் பணியாற்றும் செல்வராஜ் - ராஜலட்சுமி ஆகியோரின் மகள் ‘‘ரிதுசிறீ’’ பன்னிரெண்டாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்றும், ‘‘நீட்’’ தேர்வில் வெறும் 68 மதிப்பெண்களே பெற்ற நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கூனிமேட்டைச் சேர்ந்த
மோனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். (தமிழர்கள் வீட்டு பிள்ளைகள் தமிழ் பெயர் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்).
1.அனிதா, 2.பிரதீபா, 3.சுபசிறீ, 4.ஏஞ்சலின், 5.சுருதி ஆகியோரின் தற்கொலைகளைத் தொடர்ந்து அந்தத் தற்கொலைப் பட்டியலில் 6.வைஸ்யாவும், 7. ரிதுசிறீயும் 8. மோனிஷா இடம்பெற்றுவிட்டனர்.
இதற்கோர் முடிவைக் காண வேண்டாமா?
‘‘நீட்’’ என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தலையெடுக்கச் செய்யாத கொலை வாளாக ஆகிவிட்டதே! இதற்கொரு முடிவைக் காண வேண்டாமா? குருதிக் கொதிக்கிறதே!
பயிற்சிக்குப் பத்து லட்சம் ரூபாய் வரை செலவு
நீட் தேர்வில் முதலிடம் வர பெற்றோர்கள் மருத்துவர்களாக இருக்கவேண்டும் ரூ.10 லட்சம் வரை செலவிட தயாராக இருக்கவேண்டும் கார்ப்பரேட் கொள்ளையோ, கொள்ளை! இந்த ஆண்டு நாடு முழுவதும் 7,97,031 பேர் நீட் தேர்வெழுதினார்கள். இதில் 3, 51,278 மாணவர்கள் மற்றும் 4,45,761 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் முதலிடம் பெற்ற நளின் கண்டேல்வாலின் தந்தை, தாய் மற்றும் அண்ணன் மருத்துவர்கள், இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நான் அலைன் நீட் பயிற்சி வகுப்பில் படித்தேன்; அவர்கள் கொடுத்த பயிற்சியினால் இந்த இடத்தைப் பெறமுடிந்தது’’ என்று கூறினார்,
பொதுத் தளமான கொரா என்ற தளத்தில் ஆகாஷ் என்ற தனியார் பயிற்சி வகுப்பு - ஓராண்டு பயிற்சிக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் கட்டணமாக வாங்குகிறது என்றும், அலைன் பயிற்சி வகுப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதன்பொருள் என்ன? ஏற்கெனவே படித்த குடும்பம் பொருளாதார வசதி மிக்கக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தான் ‘‘நீட்’’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். டாக்டர்களாகவும் ஆக முடியும் என்பதற்கு இனிமேலும் ஆதாரங்கள் தேவைப்படாது. மேலும் ஓராண்டு ‘‘நீட்’’ பயிற்சி பெற்று, இவ்வாண்டு எழுதி அதிக மதிப்பெண் பெற்றோரும் அதிகம்.
தொலைநோக்கோடு நாம் கூறியதுதான் நடந்திருக்கிறது
‘‘நீட்’’டைக் கொண்டு வந்த தருணத்திலிருந்தே இதன் அபாயத்தைத் தொலைநோக்கோடு குறிப்பிட்டு வந்தோம்.
சமுக நீதிக்கு எதிரான மத்திய அரசு, எப்படியும் உயர் சாதியினரின் ஆதிக்கம் மீண்டும் மருத்துவத் துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் ‘‘நீட்’’ என்ற ஒன்றை சூழ்ச்சியாகத் திணிப்பதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள், சமுகநீதியாளர்கள் கிளர்ந்து எழுவேண்டும்.
தமிழ்நாட்டின் சட்டம் என்னாயிற்று?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - தமிழ்நாட்டுக்கு ‘‘நீட்’’ தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கதி என்ன? எந்தக் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டுள்ளது? அத்தகு சட்டத்தைப் பரிசீலிப்போம் என்று வாக்குறுதி கொடுத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதவி உயர்வு கிடைத்து மத்திய நிதியமைச்சராகவும் ஆகிவிட்டார்.
கண்டும் காணாத அ.தி.மு.க. அரசு!
சட்டத்தை நிறைவேற்றிய அதிமுக அரசோ, ஏதோ கடனுக்கு சட்டத்தை நிறைவேற்றிய மனநிலையில் மத்திய அரசுக்கு மண்டியிட்டுக் கிடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றோர் 72.6 விழுக்காடு; தமிழ்நாட்டிலோ 92.54 விழுக்காடு.
ஆனால், ‘‘நீட்’’ தேர்விலோ அந்த மாநிலம் முதலிட மாநிலங்களில் இடம்பெற்றுவிட்டது. பன்னிரெண்டு ஆண்டுகள் படித்த படிப்பில் வாங்கப்படும் மதிப்பெண்கள் மலந்துடைக்கும் காகிதமாகவும், மேல்தட்டுக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கு மலர்ச்செண்டும் கொடுத்து வாழ்த்தும்; இந்த சமுக அநீதிக்கு முடிவு கட்டப்பட வேண்டாமா?
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - வரவேற்கத்தக்கது
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தொடரில் தமிழக உறுப்பினர்கள் ‘‘நீட்’’ குறித்து ஆணித்தரமாக எழுப்பி - உரிய தீர்வு காண்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது - நம்பிக்கை அளிப்பதாகும்.
பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!
மக்கள் மத்தியிலும் இதனை வேகமாகக் கொண்டு செல்லுவோம். பெற்றோர்களும் யாருக்கோ வந்த விருந்தென்று கருதி, நாம் களம் காணும்பொழுதெல்லாம் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, களத்திற்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் என்பது முக்கிய வேண்டுகோளாகும்.
நமது போராட்டம் - ‘‘நீட்’’ ஒழிப்புக்காக எத்தனை ஆண்டுகளானாலும் தொடரவே செய்யும்! நுழைவுத் தேர்வை 21 ஆண்டுகளுக்குப் பின் - தொடர் போராட்டத்திற்குப் பின் ஒழித்தோம் என்பது வரலாறு. ஆகவே நம்பிக்கை இழக்கவேண்டாம்! உங்கள் பிள்ளைகளுக்காகத் தானே நாங்கள் களமாடுகிறோம்! என கூறப்பட்டுள்ளது.