சென்னை: 2021-22ஆம் கல்வியாண்டுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, அக்டோபர் மாதம் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், 70 ஆயிரத்து 437 இடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் வகையில், இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறி நவம்பர் 25ஆம் தேதி உயர் கல்வித் துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார்.
இரண்டாவது கலந்தாய்வு நடத்தினால், ஏற்கனவே தங்கள் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறக் கூடும் என்பதால், தனியார் கல்லூரிகள் பாதிக்க கூடும் எனக் கூறி, இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு தனியார் சுயநிதி தொழில் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் நவம்பர் 30ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை தன்னிச்சையானது எனவும், கடந்த 17 ஆண்டுகளாக இரண்டாவது கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் நலனைக் கருதி இரண்டாவது கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி ஏ.ஐ.சி.டி இ-க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.
அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!