தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில் துணை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துணை மருத்துவப் படிப்புகள் பயிலும் மாணவர்கள், உடனடியாக கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், நர்சிங், முதலுதவி சிகிச்சை, ரேடியாகிராபி, டையட்டிக்ஸ், பிஸியோதெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள் உடனடியாக தங்கள் கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும். அதனைக் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் உடனடியாக கல்லூரிகளுக்கு வர மறுத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவல் அதிகரித்துவரும் இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, கல்லூரிகளுக்கு திரும்பும் மாணவர்களை உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா தடுப்புப் பணிகளில் பணியமர்த்த வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 71 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!