மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடத்தினால் போதும் என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ரயில்வேயில் துறை ரீதியிலான போட்டித் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தினால் போதும் என்ற இந்திய ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காததொனியில் இருப்பதாகவும் மக்களின் உணர்வு சார்ந்த மொழியில் தேவையில்லாத இத்தகைய உத்தரவுகளை பிறப்பித்து, அவர்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது என்றும் உடனடியாக இந்த முடிவை திரும்பப் பெறவேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் ஏற்கனவே, ரயில் நிலையங்களுக்கு இடையிலான உரையாடல் ஆங்கிலம், இந்தி மொழியில் தான் இருக்கவேண்டும் என்ற சர்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்து, பின்னர் அதனை ரயில்வே திரும்பப் பெற்ற செய்தியையும் குறிப்பிட்டிருந்தார்.