சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும், கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 60 நாள்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடமும் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு நேற்று (ஜுன்.14) நள்ளிரவு முடிவடைந்தது.
இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர். காசிமேட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேல்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்தப் பணிகளான படகுகளில் ஐஸ்கட்டிகளை ஏற்றுவது, படகுகளுக்கு டீசல் நிரப்புவது, படகுகளின் இயந்திரங்களை சரி செய்வது, மீன்பிடி வலைகளை சரி செய்வது, படகுகளுக்கு பெயிண்டிங் அடிப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்போது, டீசல் விலை உச்சத்தில் இருப்பதால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, இந்திய மீனவர்கள் நல முன்னணி சங்கத்தின் தேசிய தலைவர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ’’மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்தி தரவேண்டும். மீனவர்கள் ஒருமுறை கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவதற்காக மாதத்திற்கு 4000 லிட்டர் முதல் 16,000 லிட்டர் வரை டீசல் தேவைப்படுகிறது. அரசு ஒரு மாதத்திற்கு 1800 லிட்டர் டீசல் மட்டுமே மானியமாக வழங்குகிறது.
இதனால், மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர். டீசல் மானிய அளவை உயர்த்தி தரவேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த மீனவர்களுக்கான தடைகால மானியம் ரூ.8000 ஆனால் தற்போது சென்ற ஆண்டு வழங்கப்பட்டதை போல் ரூ.5000 வழங்கியுள்ளார்கள்.
மீதமுள்ள ரூ.3000 மானியத் தொகையை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென’’ தெரிவித்தார்.
இதையும் படிங்க: உ.பி - 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்!