சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், அதை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "நான் ஒரு காலத்தில் மருத்துவராக ஆசைப்பட்டேன். இப்போதும் நான் டாக்டர்தான், ஆனால் ஆராய்ச்சி மருத்துவர்.
அப்போது மருத்துவத்துறையில் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். அலோபதி மருத்துவம் கடந்த 400 ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. நமது சென்னை காவல் ஆணையருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், குறிப்பிட்ட மருத்துவருக்கு தொடர்புகொண்டு, அவர் வந்து சிகிச்சை அளித்த மறுநாளே காவல் ஆணையர் பணிக்கு சென்றார்.
ஜாதகத்தை நம்பி என் அலுவலகத்தில் வேலை பார்த்த அலுவலர் ஒருவர், உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளததால் உயிரிழந்தார். எனவே, மருத்துவம் முறையாக படித்த மருத்துவர்களிடம் மட்டுமே அறிவுரையை கேட்க வேண்டும். ஜாதகம் மற்றும் ஜோசியத்தை நம்பாதீர்கள். மருத்துவர்களை நம்புங்கள்" என்றும் கேட்டுக் கொண்டார்.
தற்போது நம் நாட்டில் அனைவரும் மருத்துவர்கள் என நினைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்கள். தற்போது உள்ளே தொழில்நுட்பம் 1991ஆம் ஆண்டில் இல்லை. அப்போது இருந்திருந்தால் எனது தந்தையை காப்பாற்றியிருக்கலாம்" என்று உருக்கமாக பேசினார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Online loan App scams:ஆன்லைன் லோன் செயலி மோசடியில் சிக்கத் தவிக்கவேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை