மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் பாலமுரளி (47). கரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இவர், கடந்த 5ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாலமுரளி, சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். பின்னர், அவரின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாம்பலம் காவல் நிலையத்தில் மறைந்த பாலமுரளியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி, பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்பட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு, ஆய்வாளர் பாலமுரளியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும், 2 நிமிடம் அக வணக்கம் செலுத்தினர்.
இதையும் படிங்க: 21 குண்டுகள் முழங்க கரோனாவால் மரணித்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல் நல்லடக்கம்!