சென்னை: அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநரிடம் திமுக மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய பாபு முருகவேல், "கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என அரசு உத்தரவு இருக்கும் நிலையில் திமுகவினர் கிராமசபை கூட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகிய பரப்புரைக் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 20 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவதாகவும், பிரிவினைகளை உருவாக்கும் விதமாகவும் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அதிமுக அரசின் செயல்பாடுகளை குறைக்கும் விதமாக தொடர்ந்து அவதூறு செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். இது ஒரு தேவையில்லாத குழப்பத்தை உண்டாகும்.
1400 விவசாயிகள் மட்டுமே பத்து வருடத்தில் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் 17 ஆயிரம் விவசாயிகள் 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ளார்கள் என தவறான செய்தியை பரப்புகிறார்கள். 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் உள்ளன. அரசின் இத்தகைய சிறப்பான பணிகள் குறித்து தவறான தரவுகளுடன் மக்களிடத்தில் பொய் பரப்புரை செய்கிறார்கள்.
ஸ்டாலின் உட்பட 20 நிர்வாகிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டிஜிபி திரிபாதி இந்த புகாரை பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார்" என்றார்.