சென்னை: இது குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி) சென்னை வளாகத்தில் மூன்று புள்ளிமான்கள் அடைப்பான் நோய் (Anthrax) தாக்கம் காரணமாக சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துள்ளதாக கிண்டி தேசிய பூங்காவின் வனக்காப்பாளர் தெரிவித்திருந்தார். உடனே பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் அறிவுறுத்தப்பட்டது.
கிண்டி தேசிய பூங்காவின் கால்நடை மருத்துவருக்கு, இறந்து போன மான்களிலிருந்து மாதிரி பொருட்கள் சேகரித்து, அடைப்பான் நோய் உறுதிசெய்ய பரிசோதனைக்காக பல்கலைக்கழக மைய ஆய்வு கூடத்திற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாக இறந்துபோன மான்களின் பிரேதங்கள் பாதுகாப்பான முறையில் முறைப்படி அப்புறப்படுத்தப்படவேண்டுமென வன அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை
பிரேதங்களை, குறைந்தது 6 முதல் 8 அடி ஆழமுள்ள குழிகளில் வைக்கவேண்டும். பிரேதங்களின் மேல் சுண்ணாம்பு கலவையை தாராளமாக தூவ வேண்டும். பிரேதங்களைப் புதைத்த பிறகு மற்ற விலங்குகள் தோண்டாதவாறு முட்புதர்களை வைத்து, குழியினை மண் கொண்டு அழுத்தமாக மூடவேண்டும். இரத்த கறைபட்ட தரைப் பகுதியில் 10% பார்மலின்திரவம் தெளிக்க வேண்டும்.
அடைப்பான் நோய் பரவலில் நாய்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. மேலும் நாய்களால் மக்களுக்கு நோய் பரவல் ஏற்படாது என்றும், இதுபற்றி மக்கள் பீதியடைய வேண்டாமென்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாதிரி பொருட்களின் ஆய்வின் முடிவைப் பொறுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புனித் ராஜ்குமார் பிறந்தநாள் - உணவு வழங்கிய விஷால்!