சென்னை: ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான HVF, OCF, CVERDE மற்றும் இன்ஜின் தொழிற்சாலை என ஆறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவைகளை கார்பரேஷனாக மாற்றி, பின்னர் தனியார்மயமாக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அனைத்திந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ குமார், எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஸ்ரீ.குமார் கூறுகையில், கரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும், 41 படைத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, பாதுகாப்பு படைத்துறை தொழிற்சாலை தொழிலாளர்களின் அனைத்து சங்கங்கள் மற்றும் அசோஷியன்கள் கடுமையான கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் இந்த முடிவினை கைவிடக்கோரி பிரதமர், குடியரசுத் தலைவர், மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்பட பலரிடம் கோரிக்கை வைத்தும், அவை பரிசீலனை செய்யப்படவில்லை. இதனால் மத்திய அரசின் பிடிவாதப் போக்கினைக் கண்டித்து, படைத்துறை தொழிற்சாலை அனைத்து சங்கங்கள் மற்றும் அசோஷியன்கள் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள HVF, OCF, போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் இணைந்து, அக்டோபர் 12ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கான அடையாளமாக, காந்தி ஜெயந்தியன்று, தமிழ்நாட்டிலுள்ள காந்தி சிலைகள் முன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
அதேபோல், நாடு முழுவதுமுள்ள 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலை தொழிலாளர்களின் சார்பில், 41 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ’பாபர் மசூதி தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு’ - ஸ்டாலின்