சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது, வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாகி என்ற முறையில், திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 22ஆம் தேதி எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் அவர் ஆஜராகாததால் வழக்கு மே 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வரும் விசாரணைக்கு இன்று (ஏப். 29) வந்தது. அப்போது, எல்.முருகன் வரும் 2ஆம் தேதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: பப்ஜி மதன் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவு