புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து, அத்தியவசியக் கடைகள், சேவை நிறுவனங்கள் மட்டும் இரவு 10 மணி வரை இயங்கலாம். பிற கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மளிகை, காய்கறி, உணவகங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனம் ஆகிய கடைகள் இயங்கலாம். பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்க அனுமதியில்லை. உணவகங்களில் பார்சல் உணவு, வீட்டுக்குச் சென்று உணவு விநியோகிப்பது, உணவகங்கள், விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் அறைக்குச் சென்று மட்டும் உணவு விநியோகிப்பதற்கு அனுமதிக்கப்படும்.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் குடிக்க அனுமதியில்லை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள், பாரா மெடிக்கல்ஸ், கண்ணாடிக் கடைகள், மருந்து உபகரணங்கள், செய்தித்தாள், அவசர ஊர்தி, மருத்துவ அவசர கால சேவைகள் அனுமதிக்கப்படும். அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களில் பொது வழிபாடுக்கு அனுமதி கிடையாது.
மதசபைக் கூட்டம், திருவிழாக்களுக்கு அனுமதியில்லை. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்கள், இறுதி சடங்குகளில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கலாம். பெட்ரோல் பங்க், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏடிஎம்கள், தொலைதொடர்பு, இணையதள சேவை, ஒளிபரப்பு, கேபிள் சேவை, ஊடகம், தகவல் தொழில்நுட்ப சேவை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு துறைச் செயலர் அசோக்குமார் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், நீதிமன்ற அறிவுறுத்தல் படி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் கண்டிப்பாக ஆர்பிடிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணும் அறையில் நுழைபவர்கள் கரோனா பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இருவர் மட்டுமே சான்றிதழ் வாங்கச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: நிவாரணம் பெற்றுத்தரக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்