தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் 19 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு ஊரடங்கு இப்போதைக்கு தளர்த்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணை இயக்குநர் பிரதீப் கெளர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை. கரோனா நீண்ட நாள்களாக இருக்கும் என்பதால், நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். சில இடங்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த ஆலோசனைகளை வழங்கி உள்ளோம்.
தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். புற்றுநோய், சிறுநீரக, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டும்.
பொது இடங்களில் அதிகம் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக்கூடாது. தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு போன்றவை செய்தால்தான் கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.