சென்னை: கடலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. அந்த கிராமத்திற்கு நீர் வாழ்வாதாரமாக இருந்த அந்த ஏரி, கடந்த சில ஆண்டுகளாக முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியைத் தூர்வார வேண்டும் என்றும்; கடந்தாண்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட நிர்வாகம் சார்பில், 'ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு, ஆறு வார காலத்திற்குள் அகற்றப்படும்' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.