கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த மே 10ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அறிவித்தது. இருப்பினும், தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி மே 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கானது ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஞாயிறு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் பீதியில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க அச்சமின்றி மார்க்கெட் பகுதிகளில் குவிந்தனர். இதனால் கரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்திருந்தாலும், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்களும், காவல் துறையினரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தினர். அதேநேரத்தில் மாநகர் முழுவதும் காவல் துறையினர் வாகனச் சோதனை நடத்தி, தேவையின்றி வெளியே வந்ததாகக் கண்டறிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தத்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இன்றும் நாளையும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியுளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சரளமாக பேருந்துகளில் பயணம் செய்யும் சூழலும் உருவாகியுள்ளது. ஆனால் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துதுறை 4 ஆயிரத்து 500 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கும் மருந்தகம், நாட்டு மருந்துக் கடை இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.