மதுரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சேதுராமன் கரோனா தொற்று பாதித்து கடந்த மே மாதம் உயிரிழந்தார். அவருடைய படத்திறப்பு நிகழ்வு மதுரையில் உள்ள தனியார் உணவக விடுதியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்று அவருடைய படத்தை திறந்துவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தடுப்பூசி அளிப்பதில் மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுகிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் ஊசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. ஆக்ஸிஜன் ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசு பொறுப்புடன் செயல்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை கேட்பாரற்று அநியாயமாக நாள்தோறும் உயர்த்தப்படுகிறது.
மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை முறையாக சிகிச்சை அளிக்காத காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சேதுராமன் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மனசாட்சி இல்லாமல் நடந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மக்கள் யாருமே புகார் அளிக்காத காரணத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனச் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிக்கிறார். எடப்பாடி அரசு எப்படி அடிமையாக இருந்ததோ அப்படி திமுக அரசையும் அடிமையாக இருக்கும்படி ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்கிறது.
அதற்கு உதாரணம்தான், தடுப்பூசி வழங்குவதில் காட்டப்படும் பாரபட்ச நடைமுறை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழமைக் கட்சியான திமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்தாலும் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முறையில் தோழமை கட்சியாகவும், தேவையான நேரத்தில் எதிர்க்கட்சியாகவும் நாங்கள் செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’ஒரே தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு பல விலைகளை நிர்ணயித்துள்ளது’ - சிபிஐ முத்தரசன்