திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தை அடுத்த அய்யப்பன் நகர், முருகன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் உறை கிணற்றில் பசுமாடு ஒன்று விழுந்து கிடப்பதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து கிருஷ்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு 7 அடி ஆழம் 3 அடி அகலம் கொண்ட பள்ளத்தில் சினை பசுமாடு உள்ளே விழுந்து மண் மூடி பாதி, புதைந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள் உறை கிணற்றை அகலமாகத் தோண்டி, உள்ளே இறங்கி பசு மாட்டின் கழுத்து, தலை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் கயிறு கட்டி மேலே இழுத்தனர்.
இதையடுத்து சுமார் 20 நிமிட முயற்சிக்குப்பின் பசுவை லாவகமாக மீட்புக்குழுவினர் பள்ளத்தில் இருந்து மீட்டு வெளியே விட்டனர். சிறு சிராய்ப்பு மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்ட பசு பள்ளத்தில் இருந்து வெளியே வந்ததும் வழக்கம் போல் புல்வெளியில் மேயத் தொடங்கியது.
தகவல் தெரிந்தவுடன் விரைந்து வந்து அறிவாற்றலுடன் செயல்பட்டு, சினைப் பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: சென்னையில் பெண்ணிடம் செயின் பறிப்பு