கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்குக்கு பிறகு பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் பேருந்துகள், தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்க அரசு அறிவித்தது.
நீதிமன்றங்களை பொறுத்தவரை நீதிபதிகள் முதல் ஊழியர்கள் வரை, கரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், வழக்குகள் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கறிஞர்கள் தொழில் பாதிப்பு, வருமானமின்றி தவிப்பு, தொழில் நுட்ப கோளாறுகள் உள்ளதால் உயர் நீதிமன்றத்தை திறக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, “ சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் கரோனா தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் ஆலோசித்துதான் நீதிமன்றம் திறப்பது குறித்து முடிவு செய்ய முடியும்.
காணொலி காட்சி நீதிமன்ற விசாரணையில் உள்ள தொழில் நுட்ப கோளாறுகள் விரைவில் சரி செய்யப்படும். வீட்டிலிருந்து இணையம் மூலம் ஆஜராக முடியாத வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தில் தனி இணையதள அறை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். மேலும், நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னரே நீதிமன்ற திறப்பு குறித்து முடுவெடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பணிப்பெண்கள்!