சேலத்தைச் சேர்ந்த புத்தர் அமைப்பின் உறுப்பினரான ரங்கநாதன் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ”சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில், தலைவெட்டி முனியப்பர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அது புத்தர் சிலை ஆகும்.
அந்த சிலை மட்டுமல்லாமல், அங்குள்ள 26 சென்ட் நிலமும் புத்தர் அமைப்புக்குச்சொந்தமானது எனவும், எனவே அந்த இடத்தை மீட்டு புத்தர் அமைப்பிடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி அறநிலையத்துறை, முதலமைச்சர் தனிப் பிரிவு ஆகியவற்றில் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கிருப்பது தலைவெட்டி முனியப்பர் சிலையா அல்லது புத்தர் சிலையா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான்’ எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அரசு தரப்பில், தலைவெட்டி முனியப்பர் சிலை எனக்கருதி பக்தர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளதால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே தொடர அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ’புத்தர் சிலை தான் என அகழாய்வுத்துறை திட்டவட்டமாக கூறும் நிலையில், அது தலைவெட்டி முனியப்பர் சிலை என அறநிலையத்துறை கருத அனுமதிக்க முடியாது.
எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழ்நாடு அகழாய்வுத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். அங்கிருப்பது புத்தர் சிலைதான் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம். ஆனால் புத்தர் சிலைக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்க கூடாது” என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு: டி.ஆர். பாலு கண்டனம்