சென்னை: வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஆக. 1) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதற்கும் பொருந்தும் என்று தெரிவித்தனர்.
அதோடு வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்யாததால் மாதம் ஒரு யானை பலியாவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இல்லாவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர். அதேபோல மற்றொரு வழக்கில் வனத்துறையினரை 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்க கூடாது. அப்படி தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிப்பதால் அவர்கள் சட்டவிரோத கும்பல்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர். ஆகவே மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள் எத்தனை பேர்? இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: 'நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கை' - சென்னை உயர் நீதிமன்றம்