சென்னை: கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், பாரதி என்ற வயதான தம்பதி நேற்று(டிச.12) தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன் தினேஷ் மற்றும் மகள் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலிருந்து மாயமாகி இருந்தனர்.
நேற்று ஈசிஆர் பகுதியில் தினேஷ் மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டதன் காரணமாக, மயக்க நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகனிடம் விசாரணை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தினேஷிடம் கொளத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சரின் உறவினர் உட்படப் பலரிடமும் குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ஆறரைக் கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பாலாஜி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கில் நேற்று தன்னை அழைத்து பெரிய மேடு காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி வழக்கில் தன்னை முழுவதுமாக சிக்க வைக்க பல்வேறு சதித்திட்டம் நடைபெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். விசாரணை செய்ததில் தங்க மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜியுடன், தினேஷுக்கு தொடர்பு இருப்பது காவல்துறையினருக்குத் தெரிய வந்துள்ளது.
தினேஷ் தனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்களிடம் குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி, பாலாஜியிடம் கொடுத்ததாகவும், அதை ஏமாற்றியதால் பணம் கொடுத்தவர்கள் தினேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்வதும் தெரியவந்துள்ளது.
விசாரணையில் புதிய திருப்பம்
இந்நிலையில் பெரிய மேடு காவல்துறையினர் தினேஷை விசாரணைக்கு அழைத்ததால், மனமுடைந்து தினேஷின் தாய்,தந்தை பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருப்பினும் தினேஷ் வீட்டில் வந்து பார்க்கும்போது தாய் தந்தை இறந்து கிடந்ததாகவும், இதனால் தானும் தன் சகோதரி பாக்கியலட்சுமி பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், பயத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும் தினேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் தாய், தந்தை பூச்சி கொல்லி மருந்து குடித்து உயிரிழந்ததைப் பார்த்து விட்டு, தினேஷ் மற்றும் சகோதரி பாக்கியலட்சுமி அதிர்ச்சி தாங்க முடியாமல், பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்டு ,வீட்டை விட்டு மாயமானது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்க மோசடி வழக்கில் சிக்கியதால் தப்பிக்கும் நாடகமா..? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் சீரமைப்பு அனுமதி விவகாரம்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு