சென்னை: தமிழ்நாட்டில் 41 மற்றும் புதுச்சேரியில் 20 இடங்கள் என நாடு முழுவதும் காலியாக உள்ள 325 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அகில இந்திய கவுன்சிலிங் இன்று (ஏப்.19) நடைபெற்றது. மாநில அரசு மருத்துவ கல்லுாரிகளில் இருந்து 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த கவுன்சிலிங் இடங்கள் மூலம் நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலைகள், எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டி நடத்துகிறது.
2021–22ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இதுவரை மூன்று கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லுாரிகளில் 28 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் 13 இடங்கள் என, 41 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் 20 இடங்கள் என, நாடு முழுவதும், 325 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களை மாநில அரசு நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், நாடு முழுதும் காலியாக உள்ள, 325 மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, https://www.mcc.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் இன்று மற்றும் நாளை (ஏப்.20) நடைபெறுகிறது. இந்த கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த பட்டியல் வரும் 24ம் தேதி வெளியிடப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு, https://www.mcc.nic.in என்ற மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 'மருத்துவப் படிப்பிற்கான இன்டர்ன்ஷிப் விகிதத்தை 20% ஆக்குங்கள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்