சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத் தொலை தூரக் கல்வியில் பயின்றதாக, முறைகேடு மூலம் தேர்வு எழுதாமல், சான்றிதழ் பெற முயற்சித்த 117 நபர்கள் குறித்து ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டப்படிப்பு குழு இயக்குநர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என துணைவேந்தர் கெளரி தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி மையத்தின் மூலம் படித்தவர்களில் 117 பேர் தேர்வு எழுதாமல் முறைகேடாக சான்றிதழ்களைப் பெறுவதற்கு முயற்சி செய்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
சென்னைப் பல்கலைக் கழகத்தேர்வில் முறைகேடு - விசாரணை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைப்பு அதனைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி கூறும்போது, ,'ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தொலை தூரக்கல்வியில் பயிலாமல் முறைகேடாகச் சான்றிதழ் பெறுவதற்கு முயற்சித்தவர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம் 117 பேர் முறைகேடாக சான்றிதழ் பெறுவதற்கு முயற்சித்து உள்ளதாகத் தெரியவருகிறது.
இதுகுறித்து ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், சென்னைப் பல்கலைக்கழக சட்டக்கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
இந்தக் குழுவில் மூன்று முதல் ஐந்து நபர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், 5 பேர் கொண்ட குழுவினை சென்னைப் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழக சட்ட கல்வித்துறைத்தலைவரும் , சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு உறுப்பினருமான சொக்கலிங்கம் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டக்கல்வித்துறை பேராசிரியர் வேணுகோபால், இந்தித்துறை தலைவர் சிட்டி அன்னப்பூர்ணா, பொருளியல் துறைத்தலைவர் சத்தியன், உயிர் வேதியியல் துறைத்தலைவர் மற்றும் கல்விப்பிரிவு முதல்வர் இளங்கோவன் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.