சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ”கரோனா பெருந்தொற்று தொடர்பாக அரசு அறிவித்துள்ள ’வருமுன் காப்போம்’ அறிவிப்பை திமுக சார்பாக வரவேற்கிறோம். திமுக சார்பாக அறிவித்திருந்த நிகழ்ச்சிகள் முழுவதும் ரத்துசெய்துள்ளோம்.
கரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் வைரஸ் தொற்று அறிகுறி குறித்து கண்டறியும் ஆய்வகங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தனியார் மையங்கள் பரிசோதனை செய்யும் வாய்ப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். கரோனா வைரசை தடுப்பதில் அரசின் வெளிப்படைத் தன்மை வேண்டும்.
மருத்துவ வசதிகள் அடங்கிய தனி வார்டுகள் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும். சிறைச்சாலைகள், காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு மருத்துவ தற்காப்பு வசதியை செய்துதர வேண்டும்
அரசு நிறுவனங்களில் தேவைப்படும் அளவிற்கு முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும். கரோனா வேகமாகப் பரவக்கூடிய நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், குணமானவர்கள் எத்தனை பேர் என்று வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இதேபோல் காங்கிரஸ் கே.ஆர். ராமசாமி கொரோனா குறித்துப் பேசுகையில், ”தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது, எத்தனை பேர் மருத்துவம் பெறுகின்றனர். மேலும் இவ்வளவு பிரச்னை இருக்கும்போது சட்டப்பேரவையை நடத்த வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ”கரோனா பாதிப்படைந்தவர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டார், அவரை மருத்துவக் குழு கண்காணித்துவருகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்கள், அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் திருவாரூர், தேனி, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உள்ளது.
பூந்தமல்லியில் கண்காணிப்பு முகாமில் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். 60 கோடியில் 25 லட்சம் முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் தட்டுப்பாடு இருக்காது” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: கருணாசின் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு!