தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயலாற்றியதற்கு முதலமைச்சரை சந்தித்து பிரதமர் சார்பில் பாராட்டு தெரிவித்தேன். கரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் தொடர்பாக காலை முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வு மன நிறைவை அளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க திட்டமிட்டு, அதில் அதிகபட்சமாக 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தொடங்க தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டிற்கு முன் காசநோயை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழகம் முதல் மாநிலமாக இருந்து காசநோயை ஒழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கரோனா தடுப்பூசி ஒத்திகை முழுமையாக முடிந்த பிறகு, கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி சேமிப்புக் கிடங்கு! - ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு!