கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். மக்களுக்கு கரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவித்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அதில், விஜயபாஸ்கர் மட்டும்தான் துறை சார்ந்து சரியாக வேலை செய்வது போல் காட்டப்பட்டது. இதனால் கடுப்பான மூத்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோர் முதலமைச்சரிடம் முறையிட்டனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் அழைத்து இதுபற்றி விசாரித்து, இனிமேல் சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களை சந்திக்கட்டும், அவசியமான பணிகளை மட்டும் நீங்கள் மேற்கொள்ளுங்கள் என சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வுக்குப் பின்பு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து எங்கள் தலைவரும் நானும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது எடுத்துக் கூறியபோது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தந்தார். அது போதுமான அளவில் இல்லாவிட்டாலும், பொறுப்பை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்கள் நலன் கருதி நாங்கள் வரவேற்றுப் பாராட்டினோம். அதன்பிறகு, சில மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று முன்னேற்பாடு நடவடிக்கைகளைக் கவனித்து, கரோனா பரவல் பற்றிய புள்ளி விவரங்களை ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தத் தொடங்கினார். ஆனால் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளரை சந்திக்காமல், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் சந்தித்து வருகிறார்.
மக்களுக்கு உண்மை தெரியவருகிறது என்பதாலும், தன்னைவிட தனது அமைச்சரவை சகாவுக்கு ஊடக ஒளிபரப்புகள் மூலம் மக்களிடம் விளம்பரம் கிடைக்கிறது என்பதாலும், துறையின் அமைச்சரையே ஓரங்கட்டிவிட்டு, தனது விளம்பரத் தூதுவராக சுகாதாரத் துறை செயலாளரை முதலமைச்சர் முன்னிறுத்தியிருப்பதை, ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி செய்திகளைக் கவனிக்கும் அனைத்து மக்களும் அறிந்திருக்கின்றனர். இந்த நேரத்திலும் இப்படி ஒரு மோசமான அரசியல் கண்ணோட்டமா என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தனது ட்விட்டர் பக்கத்தில், தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் நேற்று மாலை புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத் துறை செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் தனக்கென்று ஐடி விங்கை செயல்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவரை புகழ்பாடும் விதத்தில் புகைப்படங்கள், வீடியோ இடம்பெற்றுள்ளன. ஏழாம் அறிவு படத்தில் வரும் காட்சியை மாற்றி அமைத்து, விஜயபாஸ்கர் மாநிலமாக இருப்பதால் கரோனா தொற்று இங்கு இல்லை என்பது போல் முடியும் வீடியோ மக்கள் மத்தியில் பெருமளவு சென்றடைந்தன.
இந்த வீடியோ பதிவை முதலமைச்சர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பார்த்தனர். இதனால் விஜயபாஸ்கரை ஓரங்கட்டி, தேவையான சமயம் மட்டுமே ஊடக சந்திப்பு நிகழ்த்த வேண்டும் என்றும், மற்றபடி சுகாதார செயலர் ஊடக சந்திப்பை மேற்கொள்வார் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: 30 ஆயிரம் உடல் கவசங்கள் தயாரிப்பு - முதற்கட்ட பணி முடிந்தது!