கரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க 40 ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய 12 ஒருங்கிணைப்புக் குழுவினருடன் முதலமைச்சர் விவாதித்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாகவும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அலுவலர்களின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றும், கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு புரியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
மேலும், இத்தாலி, அமெரிக்காவில் கரோனாவின் தாக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்றார்.
அந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.