தமிழ்நாடு மின்வாரியத்தில் தனியார்மயம் புகுத்தப்படாது என மின்சார துறை அமைச்சர் கூறி வரும் நிலையில், தமிழ்நாடு மின்சார தொடரமைப்பு நிறுவனத்தில் உயர் மின் கடத்திக் கம்பிகள் பராமரிப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடுவதற்கு அனுமதி அளித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் பேரிடர் காலங்களில் ஏற்பட்டதுபோல் மின்சார பழுதுபார்ப்பில் சிக்கல் ஏற்படும் என மின்வாரிய பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மூன்று துணைமின் நிலையங்களை பராமரிப்பதற்காக தனியாருக்கு வழங்குவதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து கருத்துத் தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின்சார வாரியம் எப்போதும் தனியார்மயமாகாது எனவும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
ஆனால் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் தலைமை செயற்பொறியாளர் இயக்குதலும், பராமரித்தலும் அக்டோபர் 28ஆம் தேதி சென்னை, ஸ்ரீபெரும்புத்தூர், திண்டிவனம், விழுப்பும் ஆகியவற்றின் மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 110 கேவி, 230 கேவி, 400 கேவி, 765 கேவி துணை மின்நிலையங்களுக்கு உயர் அழுத்த மின்சாரம் கடத்திச் செல்லும் உயர்மின் கடத்தி கம்பிகளை பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
மின்கடத்தி மின் கோபுரங்கள் 50 மற்றும் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் உயர்மின் கடத்தி கம்பிகளை பராமரிப்பதற்கு மூன்று ஆண்டிற்கு 300 கிலோ மீட்டர் தூரம் தனியார் நிறுவனத்தின் மூலம் தினமும் பராமரிப்பதற்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளது. மூன்று கோடிக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது என அதில் கூறியுள்ளார். இதற்கு மின்சார வாரியத்தின் பொறியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சம்பத்குமார் கூறும்போது, ”தமிழ்நாடு மின்சார வாரியம் பொது மக்களுக்கு சேவை வழங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஒரு வீட்டிற்கு மின்சாரம் அளிக்க வேண்டும் என்றால் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.
மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நிலையங்கள் தூத்துக்குடி, மேட்டூர் போன்ற அனல் மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து அதனை மின்தாெடரமைப்பு கழகத்தின் மூலம் விநியோகம் செய்ய வேண்டும். இதில் மக்களுக்கு தேவையான அளவு மின் விநியோகம் செய்வதற்கு தனியாக விநியோக பிரிவு இயங்கி வருகிறது. உயர் அழுத்தப்பிரிவின் மூலம் மின்சாரத்தை கடத்தி வந்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
தற்பொழுது மின்தொடரமைப்பு கழகத்தின் ஒரு பிரிவான லைன்ஸ் எனப்படும் உயர் அழுத்த மின்கோபுரங்கள், மின்பாதை ஆகியவற்றை பராமரிப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபகாலத்தில் 300 கோடி ரூபாய்க்கு 3 ஆண்டிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
இந்த டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் குறைந்த சம்பளத்தில் பணியாளர்களை நியமனம் செய்வார்கள். நன்கு திறமையான பணியாளர்களை நியமனம் செய்யமாட்டார்கள். தகுதியான திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மட்டுமே பழுதினை உடனடியாக கண்டறிந்து சரி செய்ய முடியும்.
உயர்மின் கடத்தி மின் பாதையில் பழுது ஏற்பட்டால் அனுபவம் வாய்ந்த பொறியாளரும், பணியாளரும் கீழே இருந்தே அதனை கண்டறிய முடியும். இது போன்ற பணிகள் அவர்களால் மேற்கொள்ள முடியாது.
உயர்மின் கடத்தி கம்பியில் பழுது ஏற்பட்டு அதனை சரி செய்யாவிட்டால் துணை மின்நிலையத்தில் உள்ள மின்சாதனங்களை பழுதடைய செய்துவிடும். மின்சாரத் துறையில் அனுபவம் பெற்ற பணியாளர்கள் உள்ளனர். எனவே இரவு பகல் பாராமல் சரி செய்து மின்சாரத்தை அளிக்க வேண்டும் என நாங்கள் செயல்படுவோம். இது போன்று தனியார் நிறுவனம் செய்யமாட்டார்கள். சமீபத்தில் மும்பையில் ஏற்பட்ட மழையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு மக்கள் மின்சாரம் இல்லாமல் 2 நாட்கள் சிரமப்பட்டனர்.
தனியார் நிறுவனத்தின் பணியாளர்களால் எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறியவே முடியவில்லை. ஆனால் மின்சாரத் துறையில் அனுபவம் பெற்ற பொறியாளர்கள் இருப்பதால் உடனடியாக கண்டறிந்து சரி செய்ய முடியும். மத்திய அரசு முதன் முதலில் ஒடிசாவில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கியது. அது தனியார் மயமாக்கப்பட்டபோது அதன் பாதிப்பு யாருக்கும் தெரியவில்லை.
அங்கு கொஞ்சம், கொஞ்சமாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினார்கள். இதைவிட பேரிடர் காலத்தில் ஒடிசாவில் மின்சார கட்டமைப்பு முழுவதும் சீர்குலைந்தது. அப்போது டெண்டர் எடுத்திருந்த அந்த நபர் எங்களுக்கு 600 கோடி ரூபாய் அளித்தால் மட்டுமே பழுதுகளை சரி செய்ய முடியும் என மத்திய அரசிற்கு தெரிவித்தனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து மாநில அளவில் போராட்டம்