சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 2018இல் கைவிரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய எழுத்துத் தேர்வில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் வழங்கக் கோரி அருணாச்சலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கேள்விக்கான சரியான விடையைக் கண்டுபிடிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்ட நிலையில், ஐஐடி பேராசிரியர் என்ற பெயரில் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையின்படி, அருணாச்சலத்தின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
மூர்த்தி என்ற பேராசிரியரே ஐஐடியில் இல்லை என மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலி அறிக்கை தாக்கல்செய்த சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் செந்தாமரை கண்ணன் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் பதிவுசெய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். ஹேமலதா அமர்வு, செந்தாமரை கண்ணனோடு நேரடியாகத் தொடர்பில் இல்லை என ஆலோசகராக அறியப்பட்ட விஜயகுமார், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் மூர்த்தி கூறியதைச் சுட்டிக்காட்டி சந்தேகத்தின் பலனை செந்தாமரை கண்ணனுக்கு அளித்து அவரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளனர்.
10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு
மூர்த்தி, விஜயகுமார் மீதான வழக்கையும் ரத்துசெய்த நீதிமன்றம், சம்பவத்தின்போது ஊட்டியில் இருந்த விஜயகுமாரை தவறுதலாகக் கைதுசெய்து 22 நாள்கள் சிறையில் அடைத்ததற்காக மூன்று மாதத்திற்குள், தமிழ்நாடு அரசு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செய்த தவறுக்காக இரண்டாயிரம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்ற பதிவுத் துறையில் நான்கு வாரங்களில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகை நக்ஷத்ரா திருமண புகைப்படங்கள் - வைரல்!