சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தல் பரப்புரையின்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைப் பற்றியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றியும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாகப் புகார் மனு அளிக்கப்பட்டது.
சீமான் மீது புகார்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபுவிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தின் வாயிலில் செய்தியாளரைச் சந்தித்த ஜெயக்குமார், "காங்கிரஸ் கட்சித் தலைவர்களைத் தரக்குறைவாக, பரப்புரையில் சீமான் பேசியுள்ளார். மிக அவதூறான சொற்களைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறையில் புகார் அளித்துள்ளோம்.
ஜனநாயகத்திற்கு ஆபத்து
2019 ஆகஸ்ட் 14 அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலைசெய்தது நாங்கள்தாம், முடிந்தால் காவல் துறை எங்களிடம் விசாரணை நடத்திக் கொள்ளட்டும் எனக் கூறினார். அன்றைய நாளே காவல் துறைத் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தோம்.
ஆனால், இதுவரை அந்தப் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மீண்டும் சீமான் மீது காவல் துறைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளோம்.
அவர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கத் தவறினால் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். சீமானின் செயல் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது.
ஹெச். ராஜா, சீமான் ஆகிய இருவரும் அசிங்கத்தை, அயோக்கியத்தனமான பேச்சை வாரி இரைக்கக் கூடியவர்கள். இவர்கள் இரண்டு பேரும் அரசியலுக்குச் சாபக்கேடு" எனத் தெரிவித்தார்.