ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக தரப்பில் வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் சார்பில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர், ஜோதிமணி பற்றி மிகவும் அநாகரிகமான சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். அவரது பேச்சிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென நிகழ்ச்சியின் நெறியாளர் மற்றும் இதர பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொண்டும், பாஜகவின் கரு.நாகராஜன் தொடர்ந்து ஜோதிமணி குறித்து முகம் சுழிக்கக்கூடிய வகையில் பேசிக்கொண்டே இருந்தார்.
இதையடுத்து, கரு.நாகராஜன் போன்ற மூன்றாம் தர நபர்களை விவாதங்களுக்கு அழைத்தால், தன்னைப் போன்றவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள் என்று கூறி, ஜோதிமணி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரைத்தொடர்ந்து திமுகவின் கலாநிதி வீராசாமியும் வெளியேறினார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகி கரு.நாகராஜனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் பிரமுகர் வழக்கறிஞர் வெல்லிங்டன் சார்பில், உள்துறை செயலாளர், காவல் துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமும், சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு இணைய வழியாகவும் பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு கடனுதவி - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி