சென்னை: சோழிங்கநல்லூரில் கால்களில் செருப்பு இல்லாமல் கொளுத்தும் வெயிலில் சுற்றித்திரிந்த நபரை பார்த்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் சீனிவாசன், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து தனது அறையில் நாற்காலியில் அமரவைத்து அவரிடம் பேசத் தொடங்கினார். அப்பொழுது அவர் பெயர் விஜயபாபு என்றும்; அவருக்கு 42-வயது எனவும் கூறியுள்ளார்.
அவருக்குத் திருமணம் ஆகி 13-வயதில் மகள் உள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக மனைவி, மகளைப் பிரிந்து வாழ்வதாகவும் மனைவி மகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். விஜயபாபு மனைவி, மகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக நடந்தே ஊர் ஊராக ஆதரவின்றி சுற்றித்திரிந்துள்ளதை அறிந்த ஆய்வாளர் சீனிவாசன் அதிக தாடியும், முடியுமாக இருந்த விஜயபாபுவிற்கு முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்து அழகுபடுத்தியுள்ளார்.
பின்னர் அழுக்கான ஆடையை அணிந்திருந்த விஜயபாபுவிற்கு ஆய்வாளரே கடைக்குச் சென்று புதிய வேட்டி, சட்டை வாங்கி கொடுத்து, குளிக்க வைத்து புத்தாடையை அணியவைத்து மாற்றுத்துணியும் கொடுத்து அழகு பார்த்துள்ளார்.
பின்னர் உணவளித்த ஆய்வாளர் கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த விஜயபாபுவிற்கு புதிய செருப்பை வாங்கி கொடுத்ததும் விஜயபாபுவின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புன்னகைத்த நிலையில் ஆய்வாளருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து விஜயபாபுவிற்கு தனியார் மருத்துவமனையில் உடல்நலம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விஜயபாபுவை ஒரு பாதுகாப்பான காப்பகத்தில் ஒப்படைக்க முடிவெடுத்த காவல் ஆய்வாளர் ’கரங்கள்’ என்ற அரசு காப்பகத்தில் ஒப்படைத்தார். செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் சீனிவாசனின் இந்த மனிதநேயமிக்க செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..