சென்னை: சிட்லபாக்கத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏரி ஆக்கிரமிப்பில் உள்ள 450 வீடுகளை அகற்றுவதற்காக வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பட்டா நிலங்களை ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்ற முயலுவதாகப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிகளை அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் இணைந்து அளவீடு செய்யும் பணியை இன்று காலை தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நூற்றுக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பட்டா நிலங்களை அளக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களிடமுள்ள பத்திரங்களை, பட்டா விபரங்களைக் கேட்ட பிறகு அளக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
வருவாய்த் துறையினர் தொடர்ந்து அளவீடு செய்ததால்தான் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அளவீடு செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். தொடர்ந்து அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. ஒருதலைபட்சமாக அளவீடுகள் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
கிராம நத்தம், ஏரி ஆக்கிரமிப்புகள் மட்டுமே அளவீடு செய்யப்படுவதாக தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தெரிவித்தார். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடச் செலவு கூடுதலாக ரூ.200 கோடி அதிகரிப்பு