அண்மையில் நடைபெற்ற திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஊடக கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), வழக்கறிஞர் அருள்மொழி (திக), மல்லை சத்யா (மதிமுக), கனகராஜ் (சிபிஎம்), சி.மகேந்திரன் (சிபிஐ) உள்ளிட்டோர் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதியை இன்று(ஆகஸ்ட் 3) சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர், அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ’தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நியாயத்தை, உண்மையை எழுதும் ஊடகவியலாளர்கள் அதிகளவில் தாக்கப்படுகின்றனர். சமூக ஊடகங்கள் வாயிலாக மிரட்டப்படுகின்றனர். ஊடகங்களின் நிர்வாகத்தில் தலையிடக் கூடிய அளவில் அவர்களின் பொய் பரப்பும் ஆளுமை இருக்கிறது. பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடைபெறும் ஆபாச தாக்குதல்கள் குறித்து காவல் துறையில் புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், அரசுகளின் ஆதரவு பெற்றோர் புகார் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேபோல், எந்த அரசியல் இயக்கத்திற்கும் உட்படாத இளைஞர்கள் தங்களுடைய உரிமைக்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தால், ஆளுங்கட்சியினர் நேரடியாக அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். பெண்களாக இருந்தால் அவர்களுடைய தனி வாழ்வை தவறாக சித்தரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக இயக்கங்கள் ஆகியோர் மீதும் இந்த தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் கேட்டுள்ளோம். சைபர் கிரைம் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக அவரும் கூறியிருக்கிறார். ஒருவேளை இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அடுத்தகட்டமாக சட்டப்போராட்டம் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்’ என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவருக்கு அவசர ஊர்தி வழங்காத விவகாரம்; மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!