சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி தி.நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். சசிகலாவின் வழக்கறிரான ராஜா செந்தூர்பாண்டியன் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் சசிகலா பெயரில் போலியான டிவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு, அதில் தொடர்ந்து தவறாக தகவல்களை சில விஷமிகள் பரப்பி வருவதாக அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். உடனடியாக விஷமியை கைது செய்து டிவிட்டர் கணக்கை முடக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அந்த நபர் தொடர்ந்து சசிகலா பெயரில் டிவிட்டரில் தவறான தகவலை பதிவிட்டு வந்ததால் மீண்டும் கடந்த 8ஆம் தேதி வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் காவல் ஆணையரிடம் உடனடியாக டிவிட்டர் கணக்கை முடக்குமாறு புகார் அளித்துள்ளார். இதையடுத்து அப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த போலி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.