கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்கள் ஆன்லைன் கல்வியால் உடலளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் உள்ள பல மாணவர்களின் வீடுகளில் ஆன்லைன் வழி கல்விக்கான வசதி இல்லை என்பதால், மனதளவில் சோர்வடைந்து, பெரும்பாலான மாணவர்கள் தவறான முடிவுகளுக்கு செல்ல நேரிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆன்லைன் வழி கல்விக்காக தனியார் பள்ளிகள் பெற்றோரிடத்தில் கட்டணம் வசூலிப்பதாகவும், தற்போதைய சூழலில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!