சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் டிசம்பர் 2ஆம் தேதி மதியம் 12 மணியளவில் தனது அறைக்கு சென்றுள்ளார். பகல் 3 மணிக்கு வீட்டிற்கு சென்ற அவரது மனைவி, கதவு திறக்க முயற்சித்துள்ளார்.
கதவைத் திறக்கு முடியாததால், அதை உடைத்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் 174 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.
வெங்கடாச்சலம் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக அவரது இரு கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வெங்கடாச்சலத்தின் உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்பே, அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்படும்.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினர் வெங்கடாச்சலத்திற்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. விசாரணைக்கு ஆஜராவது எப்போது என வெங்கடாச்சலத்திடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கேட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெங்கடாச்சலத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினரின் மூலம் துன்புறுத்தல் உள்ளதா என விசாரணைக்கு பிறகே தெரியவரும். உயிரிழந்த ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை அலுவலர் நல்லம்மா நாயுடு வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிருக்குப் போராடியவரை காப்பாற்றிய செவிலியர்