சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் 53 பேருக்கு கடந்த 23ஆம் தேதியில் இருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி விடுப்பு எடுத்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருகின்ற 8ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகின்ற 8ஆம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் நிர்வாக ரீதியான வேலைகளை அமைச்சுப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மட்டுமே சுமார் இருநூறு அமைச்சுப் பணியாளர்களும் இது மட்டுமல்லாமல் நான்கு மண்டலங்களிலும் சுமார் 300 அமைச்சுப் பணியாளர்கள் என மொத்தமாக காவல் துறையில் சுமார் 500 அமைச்சுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதியிலிருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் மூன்று சூப்பிரண்டுகள் உள்பட சுமார் 53 அமைச்சுப் பணியாளர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாக விடுப்பு எடுத்து வந்ததால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் இது தொடர்பாக வருகின்ற எட்டாம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் 53 அமைச்சுப் பணியாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.