சென்னை: பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்பட்டு வரும் மாதிரிப்பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற புதிய நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக இன்று (ஜூன் 14) தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகளும், அதனைத்தொடர்ந்து மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என்ற வகையில் 32 மாவட்டங்களில் அரசு மாதிரிப்பள்ளிகளை நடத்தி வருகிறது.
மேலும், கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரி பள்ளிகளை ரூ.150 கோடி செலவில் தொடங்க தமிழ்நாட்டில் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக சோதனை முறையில் சென்னையில் 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பில் நன்கு பயிலக் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்புப்பயிற்சியும் பள்ளிக்கல்வித்துறையால் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரிப்பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வுத் தேர்வு எனப்படும் Trust தேர்வு மதிப்பெண், பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு எனப்படும் National Means-cum-Merit Scholarship Scheme - NMMSS தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பள்ளி அளவில் பெற்ற மதிப்பெண்களும், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான National Talent Search Exam - NTSE தேர்வு மதிப்பெண் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதலே சிறப்புக்கவனம் செலுத்துவது; சிறப்புப் பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் உட்பட தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையைப் பின்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களைத்தேர்வு செய்து கற்பிப்பது போல், அரசும் முடிவு எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர் திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு