சென்னை: பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் தடம் எண் 18K என்ற பேருந்து நேற்று திருவல்லிக்கேணி தேவி திரையரங்கு பேருந்து நிறுத்தம் வழியாக சென்று+ கொண்டிருந்தது. அதில் பயணித்த 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடிக்கொண்டும், தாளம் தட்டிக்கொண்டும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் ராஜேந்திரன் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, மாணவர்களை தட்டிக்கேட்டார். அப்போது கல்லூரி மாணவர்கள் ஓட்டுனர் ராஜேந்திரனிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டதுடன், அவருக்கு ஆதரவாகப் பேசிய சக பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர்கள் ஆத்திரத்தில் சாலையோரம் கிடந்த மது பாட்டிலை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் எறிந்து கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில், பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வாய்மொழிப் புகார் அளித்துவிட்டு பேருந்தை கே.கே நகர் பணிமனைக்கு எடுத்துச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பேருந்தில் பயணித்தவர்கள் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பயணிகள் குறுகிய நேரம் ஓய்வு எடுக்க கேப்சூல் ஓட்டல் - சென்னை விமான நிலையத்தில் திறப்பு