சென்னை: கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சத்தியா (20), தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்ற இளைஞர் சத்தியாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் சத்தியா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சதீஷ் சத்யாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் சதீஷ் தள்ளிவிட்டார்.
இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சத்தியாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், ரயில்வே காவல் துறை சார்பாக நான்கு தனிப்படைகள், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் என மொத்தம் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி நடந்த சுவாதி படுகொலை சம்பவத்தைப் போன்றே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், காவல் துறையினர் இச்சம்பவம் குறிதது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் "டூயட்" ரீல்ஸ் பதிவிட்ட மனைவியை வெட்டிய கணவன்