காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. இதுதான் மெட்ராஸ் மாநிலத்தின் கடைசி முதலமைச்சரும், திமுக நிறுவனரும், தமிழ்நாடு என பெயரிடப்பட்ட மாநிலத்தின் முதல் முதலமைச்சருமான சி.என். அண்ணாத்துரையின் இயற்பெயர்.
இவரை மக்களும் திமுகவினரும் அன்போடு பேரறிஞர் அண்ணா என்றே அழைத்தனர். இவருக்கு மாநில அரசியல் மட்டுமின்றி, மத்திய அரசியலும் அத்துப்படி. இவர் டெல்லியில் தனது முதல் உரையை 1962ஆம் ஆண்டு மே1ஆம் தேதி ஆற்றினார். அந்தக் கன்னி உரை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அது, குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் அவையை அலங்கரித்த காலம். அப்போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேசிய சி.என். அண்ணாத்துரை, “அவையில் தனது கருத்துகளை எடுத்துவைக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இந்த அவையில் பங்கேற்ற எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. ஆனாலும் அவையில் கற்றுக் கொள்ளவே வந்தேன், பேசி பிரச்னையை கிளர அல்ல.
இருப்பினும் அவையின் சூழ்நிலை பாபு ராஜேந்திர பிரசாத்தை வாழ்த்த வைத்துள்ளது. அவரின் பண்புகளை போற்றுகிறேன். இருப்பினும் அவர் சார்ந்துள்ள கட்சியில் எனக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் பலமிக்க கட்சி கிடையாது, எதிர்க்கட்சிகளின் பலவீனமே காங்கிரஸின் பலமாக உள்ளது” என்றார். இந்த உரை அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
இது மட்டுமா, ஜனநாயகம், தேசியம், சோசலிசம் குறித்தும் சி.என். அண்ணாத்துரை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அந்த உரையில், “அரசின் செயலுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு முறை இல்லாதவரை ஜனநாயகத்துக்கான எவ்வித பலனையும் எதிர்பார்க்க முடியாது.
சோசலிசம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல. சம வாய்ப்பு வழங்குவது. ஆனால் சோசலிசம் குறித்து நாட்டில் முரண்பட்ட கருத்துகள் நிலவுகிறது. ஒரே கட்சிக்குள்ளே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு, தனித்தொகுதி என்று ஒருவர் பேசுவார். மற்றொருவர் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பார். சோசலிசம் என்பது நல்ல குறிக்கோள் என்றாலும், நாம் அதனை நோக்கி செல்லவில்லை.
சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகள் ஒரே தேசியக் கட்சி ஆட்சி செலுத்த போதிலும், நாம் தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசிவருகிறோம். அப்படியானால் நாம் தேசிய ஒருமைப்பாட்டை அடையவில்லை என்று தானே அர்த்தம்.
இங்கு சிலர் ஹிந்தியை கற்றுக் கொள்வதே தேசிய ஒருமைப்பாடு என்கிறார்கள். ஹிந்தியை கற்று கொள்வது மட்டும்தான் தேசிய ஒருமைப்பாடா? நான் ஒரு திராவிடன், என்னை திராவிடன் என அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
ஆனால் நான் மராத்தியனுக்கோ, வங்காளிக்கோ, குஜராத்திக்கோ எதிரானவன் அல்ல. உங்களோடு ஒரே நாடாக இருப்பது எனக்கும் ஆசைதான். ஆனாலும் ஆசை வேறு, எதார்த்தம் வேறு” எனக் கூறினார்.
திராவிட நாடு பிரிவினை குறித்து பேசுகையில், “நாங்கள் மனதில் குரோதத்துடன் பிரிவினை கோரவில்லை. எங்களது பிரிவினை கோரிக்கை, வட இந்தியர்கள் மனதில் பாகிஸ்தானை நினைவுருத்தலாம்.
எனது எண்ணம் அதுவல்ல. பிரிவின் வேதனையை உணர்ந்தவன் நான். எங்களது லட்சியம் கவனிக்கப்பட்டு, கனிவோடு வரவேற்கப்பட்டால் குரோதம் என்பதே வராது. பொதுவாக, தென்னகம் ஒரு தனித்த அடையாளம் கொண்டது.
ஆகவே மக்கள் பிரிவின் வலியை உணர மாட்டார்கள்” என்றார். திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து திமுக என்ற கட்சியை தொடங்கிய சி.என். அண்ணாத்துரை, அவருக்கு பின்னர் வந்த திராவிட தலைவர்களின் வாழ்க்கையிலும் அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தியது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்.
அந்தச் சமயம் வட இந்தியாவிலும் காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் எழுச்சி பெற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மத்தியில் ஆங்கிலத்துக்கு விடை கொடுத்துவிட்டு ஹிந்தி மொழியை ஆட்சி மொழியாக்க 1963ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் முடிவுசெய்தது.
இந்தச் சூழலில் மாநிலங்களவையில் ஹிந்தி அச்சுறுத்தல் என்ற தலைப்பில் சி.என். அண்ணாத்துரை முழங்கினார். இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது.
“ஹிந்தி மொழி முன்னேறிவிட்டது என்று உள்துறை அமைச்சர் (லால் பகதூர் சாஸ்திரி) கூறுகிறார். எங்கள் மொழி ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது, அப்படியிருக்க என்னால் ஹிந்தியை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
ஹிந்தியை ஆட்சி மொழியாக அறிவித்தால், அது ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு சாதகமாக அமையும். மற்ற மாநிலங்கள் இழப்பை சந்திக்கும். நாட்டில் 40 சதவீதத்தினர் ஹிந்தி பேசுகிறார்கள் என்கிறார்கள்.
40 அல்ல 20 சதவீதம் பேர் ஹிந்தியை பேசி, அந்த மொழி நாடு முழுக்க பரவலாக இருந்தால் கூட இந்தப் பேச்சில் சிறு அர்த்தம் இருக்கும். ஆனால் ஹிந்தி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் அடங்கிவிடுகிறது.
ஆனால் உயர் தனித்தமிழ் செம்மொழி எங்கள் வாழ்வில் கலந்தது. அந்தப் பெருமிதம் எனக்கு உண்டு. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கும் வரை நான் திருப்தி அடைய மாட்டேன்.
என் வாதம் தமிழுக்கானது. அதற்காக ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களின் வாதத்தை நான் மறுக்கவில்லை” என்பதே அவரின் கூற்று.
தந்தை பெரியாருக்கு பிறகு தமிழ்நாட்டின் மாபெரும் அரசியல் தலைவராக உயர்ந்தவர் பேரறிஞர் அண்ணா. இன்றைய ஆளுங்கட்சி இவரின் பெயரையை தாங்கி நிற்கிறது. எதிர்க்கட்சியும், “அண்ணா வழி நடப்போம்” என்றே முழங்குகிறது.
ஆரம்ப காலத்தில் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அண்ணா, நீதிக்கட்சியில் பயணித்தார். அதன் பின்னர் திராவிடர் கழகத்தில் அரசியல் பாலப்பாடம் பயின்ற அண்ணா, அடுத்து திமுக என்ற தனிக்கட்சியை உருவாக்கினார்.
ஆரம்பக் காலத்தில் கடவுள் மறுப்பு கொள்கையை தாங்கிப்பிடித்த அண்ணா, அதன்பின்னர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன், கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று” என மாறத் தொடங்கினார்.
இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஒருமுறை நேர்க்காணலின்போது, “கடவுளுடன் நேர்மையாக வாதிடுபவன் நான்” என அண்ணாவே கூறியுள்ளார். மக்களின் பேராதரவு அண்ணாவுக்கு இருந்தாலும், காலம் கருணை அளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி நடத்தினார்.
அவரின் ஆட்சிக்காலத்தில்தான் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. இன்று அவருக்கு 112ஆவது பிறந்தநாள். மண்ணை விட்டு உடல் மறைந்தாலும், தலைவனாக தலைமுறைகள் கடந்து வாழ்கிறார்!
இதையும் படிங்க: தோழரைப் போற்று......!